Monday 14 December 2015

நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.

பொருள்:

இந்த பாடலில், அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து, அன்னையை தொழுவார்க்கு கிடைக்கும் பலனை அபிராமி பட்டர் கூறுகிறார்.

அன்னை அபிராம வல்லி, இந்த அண்டத்தை பெற்றவள். ஸ்ரீ மாதா என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் முதல் நாமம், அன்னையே என்று துவங்குகிறது.

மாதுளம் பூ போல், இளஞ்சிவப்பு நிறத்தவள். சிந்தூராருண விக்ரஹாம் என்று லலிதா சஹஸ்ரநாமம் த்யானம் தொடங்குகிறது. சிந்தூரம் போல், சிவந்த மேனி உடையவள் அன்னை. அருணா என்றும் ஒரு பெயர் அவளுக்கு. மேலும் உத்யத் பானு சஹாஸ்ராபா என்றும் ஒரு நாமம். 1000 உதய சூரியர்களைப்போல் சிவந்த மேனி உடையவள் என்று இதற்கு பொருள்.

இந்த உலகை அருளாட்சி புரிந்து காப்பவள். ஸ்ரீ மகா ராக்ஞீ, ஸ்ரீ மத் சிம்ஹாசனேஸ்வரி, என்று அன்னையின் பரிபாலனத்தை விளக்கும் இரு நாமங்கள், சஹஸ்ரநாமத்தில் இரண்டாவது, மூன்றாவதாக வருபவை.

 ஐந்து மலர்களால் ஆன அம்பு, பாசம், அங்குசம், கரும்பு வில் ஆகியவற்றை தன் திருக்கரங்களில் ஒருங்கே ஏந்தியவள். ராகஸ்வரூப பாஷாட்யா, க்ரோதாங்காராங்குஷோஜ்வலா, மனோ ரூபேக்ஷு கோதண்டா, பஞ்ச தன்மாத்ர சாயகா என்று அடுத்து வரும் நாமங்கள் இந்த வரிகளை விளக்குபவை.

இத்தகு பெருமை வாய்ந்த முக்கண்களை உடையவளை (த்ரிநயனாம் என்று சஹஸ்ரநாமம் அன்னையை வர்ணிக்கிறது) தொழுவார்க்கு என்றும் நன்மையே. தீமை அணுகவே அணுகாது.

எல்லோரும் இன்புற்றிருக்க அன்னை அபிராமியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பாடல் (ராகம் - மத்யமாவதி, தாளம் -- விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

2 comments:

  1. Excellent tuning delivery deliberation. We are blessed since the day one till date.God bless you.

    ReplyDelete