Sunday 13 December 2015

பாடல் - 100

பலன்: அன்பால் இணைவோம்

குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திரு நெடுந்தோளும், கருப்பு வில்லும்
விழையைப் பொரு திறல் வேரியம் பாணமும், வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!

பொருள்:
1. குழை - கூந்தல். கூந்தலை தழுவும் கொன்றை மலரால் கட்டப்பட்ட மாலையானது அன்னையின் மார்பின் மீதும் தழுவுகிறது. அதனால், அன்னையின் திருமார்பகங்களில், அந்த மலரின் வாசம் நிறைந்துள்ளது.

2. அன்னையின் தோள்கள், நெடுந்தோள்கள். தோள்கொடுப்பது என்றால், ஆறுதல் தருதல், அரவணைத்தல் ஆகும். அம்பாள் நம்மை அரவணைப்பவள். நமக்கு ஆறுதல் தருபவள். அதற்காகவே அன்னைக்கு பெரிய நெடுந்தோள்.

3. அன்னை தன் ஒரு கையில் அழகிய கரும்பு வில்லும், மற்றொரு கையில் 5 மலர்களாலான அம்புகளையும் வைதுள்ளாள்.

4. அன்னை, தன் அழகிய வெண் பற்களை காண்பித்து, குறுநகை புரிகிறாள். சுத்த வித்யாங்குரா கார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அன்னையின் பற்கள் தூய அறிவு போல் வெண்மையானது, என்று வர்ணிக்கிறது.

5. மான் போன்ற மருண்ட கண்கள் உடையவள். மான் எப்போதும் எச்சரிக்கையாகவே பார்த்துக்கொண்டிருக்கும். அன்னையும், தன் குழந்தைகளாம் நம்மை காக்கும் பொருட்டு, அது போல இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருப்பாள்.

இதுபோன்ற அழகியவை நிறைந்த அன்னையின் திருமேனியே என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அந்த திருமேனியை என்றும் வழிபடுவேன்.

இவ்வாறு பட்டர் பாடுகிறார். நாமும் அவர் வழி நடப்போம்.

பாடல் (ராகம்: லலிதா, தாளம் - --விருத்தம்--) கேட்க:
Check this out on Chirbit

No comments:

Post a Comment