Friday 23 October 2015

பாடல் - 82

பலன்: ஞாபக சக்தி அதிகரிக்கும்

அளியார் கமலத்தில் ஆரணங்கே, அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை, உள்ளுந்தொறும்
களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைப்புரண்டு,
வெளியாய் விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே!

பொருள்:

தேன்ததும்புவதால், வண்டுகள் மொய்க்கும், அழகிய தாமரையில் வீற்றிருக்கும் அழகிய பெண்ணே,  இந்த அண்டம் முழுவதிலும் ஒளியாக, உனது ஒளிவீசும் திருமேனி பரவியுள்ளது. அத்திருமேனியை நான் என் உள்ளத்துள் நினைத்து வருவதால், என் உள்ளத்தில், மகிழ்ச்சி பெருகி, பொங்குகிறது. அந்த களிப்பானது, விம்மி, கரைப்புரண்டு ஆகாயத்திற்கு சென்று அதில் கலந்துவிடுகிறது. இப்படிப்பட்ட பேரானந்தத்தில் என்னை மிதக்க செய்த உன் அருளை எப்படி மறப்பேன்? ஒரு போதும் அது மறக்க முடியாதது.

அம்பாளுக்கு அவ்யாஜ கருணா மூர்த்தி என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம். கரை இல்லா கருணைக்கடல் அவள். பக்தர்களுக்கு என்றால், அவள் கணக்கே பார்க்காமல் கருணைப்பொழிவாள்.

பக்த விஸ்வாசினி என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தனது "பரதேவதா ப்ரஹத் குசாம்பா" (திருவிடைமருதூர், ப்ரஹத் குசாம்பாள் மீது பாடிய பாடல்) என்ற தன்யாசி ராக பாடலில் பாடியுள்ளார். பக்தர்களிடம் அப்படி ஒரு விஸ்வாசம் அம்பாளுக்கு. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாள் அன்னை. அதானாலோ என்னவோ, இப்பாடல், அம்பாள் எழுந்தோடி வருவாள் என்பதால் தோடி ராகத்தில் அமைந்தது.

பாடல் (ராகம்-தோடி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment