Thursday 10 September 2015

பாடல் - 61

பலன்: மாயை விலகும்

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய், நின்னை உள்ளவண்ணம்,
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்!
தாயே! மலைமகளே! செங்கண் மால் திரு தங்கச்சியே

பொருள்:
நாயேன் - மிகவும் தாழ்ந்தவன்

பட்டர் தன்னை ஒரு நாயை போல தாழ்த்திக்கொண்டு பாடுகிறார். ஒருவர் தன்னை மிகவும் சிறியவன் என்று அடக்கத்தோடு குறைத்துக்கொண்டு பேசினால், அவர் பலமடங்கு உயர்ந்தவாராகிறார்.

மிகவும் சிறியவனான தன்னையும் ஒரு பொருளாக கருதி, அம்பாளே தன்னையறியாமல் ஆட்கொண்டாள். அதுமட்டும் இல்லாமல், அம்பாளை உள்ளாது உள்ளபடி பேயேனான தான் (பட்டர்) அறியும் படி அறிவு தந்தாள். இது எவ்வளவு பெரிய பேறு? அன்னையே, மலையரசன் மகளே, சிவந்த கண்கள் கொண்ட விஷ்ணுவின் தங்கையே என்று அன்போடு அழைக்கிறார்.

மலையத்வஜ பாண்டியன் மகளாக, மதுரையில் மீனாக்ஷி அம்மன் அவதரித்தாள். பர்வத ராஜ குமாரி பார்வதி. இமயவானின் புதல்வி ஹைமவதி. ஹிமகிரி புத்ரி, ஹிமாத்ரி சுதே, ஹிமாச்சல தனயா என்றெல்லாம் அம்பாளை அழைப்பார்கள். அவளே மலைமகள். கைலையம்பதியான பரமேஸ்வரனின் பத்னி.

விஷ்ணு, சதாசர்வகாலமும் உலகை காத்துக்கொண்டிருப்பதால், கண் அயராது இருப்பார். அதனால் என்னவோ அவர் கண் சிவந்தே இருக்கும் போல.
ஆண்டாளும் திருப்பாவையில் 30 -ஆம் பாசுரத்தில்,

செங்கண் திருமுகத்து செல்வ திருமாலால்,
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

என்று பாடியுள்ளார். சிவந்த தாமரை போன்ற அழகு வாய்ந்த கண்கள் என்பதாலும் பெருமாளை, செங்கண் மால் என்று அழைக்கிறார்கள்.

பாடல் (ராகம்-சுருட்டி, தாளம்-சதுஸ்ர ஏகம்) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment