Saturday 2 May 2015

பாடல் - 29

பலன்: எல்லா சித்திகளும் பெறலாம்

சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகி, திகழும் பரா
சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

பொருள்:
8 சித்திகள் - அஷ்ட மஹா சித்திகள்:
1. அணிமா - அணு போன்ற சிறிய உருவம் கொள்ளுதல்
2. மஹிமா - பெரிய உருவம் கொள்ளுதல்
3. கரிமா - மிக கணமான சரீரம் கொள்ளுதல்
4. லஹிமா - மிக மெல்லிய சரீரம் கொள்ளுதல்
5. ப்ராப்தி - எல்லா இடத்திற்கும் தடையின்றி சஞ்சரித்தல்
6 . ப்ராகாம்யம் - நினைத்தவற்றை பெறுதல்
7. ஈசத்வம் - அனைத்திற்கும் தலைவனாக இருத்தல்.
8. வசித்வம் - அனைத்தையும் தன்வயப்படுத்துதல்

இந்த 8 சித்திகளாகவும், இதனை அருளும் தெய்வமாகவும், பராசக்தியாகவும், அந்த சக்தியால் தழைத்திருக்கும் சிவமாகவும், தவம் செய்வோர் பெரும் முக்தியாகவும், முக்திக்கு விதையான ஞானமாகவும், இந்த ஞானத்திலிருந்து முளைத்த புத்தியாகவும், இந்த புத்தியால் ஏற்பட்ட பற்றற்ற மனநிலையாகவும் இப்படி அனைத்தாகவும் ஆனவள் அன்னை அபிரமியன்றி வேறெவரும் இல்லை.

அம்பாள் வித்யா ஸ்வரூபிணி ஆவாள். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் "வித்யா அவித்யா ஸ்வரூபிணி" என்று ஒரு நாமம் இதனை குறிக்கும். மேலும் சின்மயீ (சித் வடிவினள்) என்ற நாமமும் அம்பாளின் ஞான ஸ்வரூபத்தை குறிக்கும்.

ஸ்ரீ சக்ரத்தில், வெளி பிரகாரம் - த்ரைலோக்ய மோகன சக்ரம் அல்லது பூபுரம். இதில் மூன்று இணை சுற்றுகள் (concentric) உண்டு. அவற்றில், முதல் சுற்றில் அணிமாதி அஷ்டசித்திகள் உள்ளனர். இரண்டாம் சுற்றில் மாத்ருகா சக்திகள் (சப்த கன்னிகையர் போன்றோர்) உள்ளனர். மூன்றாம் சுற்றில் 10 முத்ரா சக்திகள் (சம்க்ஷோபினி போன்ற சக்தி தேவதைகள்)உள்ளனர்.

பாடல்(ராகம்-கமலா மனோஹரி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment