Monday 25 May 2015

பாடல் - 36

பலன்: பழவினை வலிமை குறையும்

பொருளே, பொருள்முடிக்கும் போகமே, அரும்போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உனது
அருள் ஏது அறிகின்றிலேன், அம்புயா தனத்து அம்பிகையே.

பொருள்:
அம்புயா தனம் - குவிந்த ஸ்தனங்கள் அதாவது மார்பகங்கள்.
குவிந்த ஸ்தனங்களை உடைய அம்பிகையே, நீயே பொருள், அதனால் கிடைக்கக்கூடிய போகம், அந்த போகத்தால் உண்டாகக்கூடிய மாயை, மாயையின் முடிவில் வரும் தெளிவு. எனது மனதில், வஞ்சகத்தினால் இருள் தோன்றாமல், வஞ்சனை அற்ற ஞான ஓளி பிறக்க வழிவகுத்தாய். உனது அருளினை பூரணமாக அறியமுடியாமல் தவிக்கின்றேன்.

மகாகவி பாரதி,

வஞ்சனை இன்றி, பகை இன்றி, சூதின்றி,
வையக மாந்தரெல்லாம்,
தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பெயர்
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!

என்று பாடியுள்ளார்.

அதாவது, சக்தி சக்தி சக்தி என்று மனிதர்கள் சொன்னால், வஞ்சனை, பகை, சூது போன்றவை இவ்வுலகை விட்டு போய்விடும். இது உறுதி என்று படும்படி, மூன்று முறை அறுதியிட்டு கூறுகிறார்.

பாடல் (ராகம்-தன்யாசி, தாளம்---விருத்தம்---) கேட்க:


Check this out on Chirbit

Thursday 21 May 2015

பாடல் - 35

பலன் - மனதிற்கு பிடித்தாற்போல்  திருமணம் நிறைவேறும்

திங்கள் பசுவின் மணம் நாறும் சீரடி, சென்னி வைக்க,
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்,
தங்கட்கு இந்த தவம் எய்துமோ? - தரங்க கடலுள்
வெங்கண் பணியனை மேல் துயில் கூறும் விழுபொருளே

பொருள்:
தரங்க கடல் - பாற்கடல்
வெங்கண் - வெப்பம் ததும்பும் கண். வெப்பத்தால் சிவந்த கண்
பணியனை - பணி - பாம்பு, அனை - தலை அனை போல. அதாவது பாம்பு படுக்கை.

திருப்பாற்கடலில், ஆதி சேஷன் மேல் துயிலும் அன்னை வைஷ்ணவியே, (இங்கே பட்டர், அன்னையே விஷ்ணு என்று பாடுகிறார்.), சந்திரனின் மணம் வீசும் நினது சீர்மிகு திருவடிகளை, என் தலைமேலும் நீ வைக்க நான் என்னதவம் செய்தேனோ! நம் முன்னோர்களும், தேவர்களும் கூட, தங்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள்.

பாடல் (ராகம் - ராமப்ரியா, தாளம் - ஆதி) கேட்க:


Check this out on Chirbit

Saturday 16 May 2015

பாடல் - 34


பலன் - சிறந்த நிலங்கள் கிடைக்கும்

வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவோடு தான்போய் இருக்கும், சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும், பாகமும் பொன்
செந்தேன் மலரும், அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே

பொருள்:

அன்னை அபிராமி எதிலெல்லாம் இருக்கிறாள் என்று பட்டர் இப்பாடலில் கூறுகிறார்.
1. சதுர்முகனின் (பிரம்மா) படைப்புத்தொழில் - ஸ்ருஷ்டி கர்த்ரீ பிரம்ம ரூபா என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
2. தேன் சிந்தும் மலர்கள் நிறைந்த மாலை, துளசி, அணிகலன்கள்அணிந்தவரான திருமாலின் மனத்தில் - அவர் செய்யும் காப்புதொழில் - கோப்த்ரீ கோவிந்த ரூபிணி என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
3. பாகமும் - ஈசனின் இட பாகத்தில் - அதாவது சிவனின் அழிக்கும் தொழிலில். சம்ஹாரினீ ருத்ர ரூபா என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
4. தேன் ததும்பும் தாமரை மலரில் (பொன் செந்தேன் மலரும்)
5. அலர் கதிர் ஞாயிறு - விரிந்த கதிர்கள் உடைய சூரியன் - பானு மண்டல மத்யஸ்தா என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.
6. திங்களுமே - சந்திரனிலும். சந்திர மண்டல மத்யாகா என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது.

மேலும் அன்னை தன்னிடம் வந்து சரணம் புகுவோற்கு உயர்ந்த தேவலோகத்தை தருகிறாள்.

பாடல் (ராகம் - ஜனரஞ்சனி, தாளம் --விருத்தம்---) கேட்க:

Check this out on Chirbit

Thursday 14 May 2015

பாடல் - 33

பலன்: இறக்கும் தருவாயிலும் நல்ல நினைவிருக்கும்

இழைக்கும் வினைவழியே, அடும்காலன் எனை நடுங்க 
அழைக்கும் பொழுது  அஞ்சல் என்பாய், அத்தர் சித்தமெல்லாம் 
குழைக்கும் களப குவிமுலை யாமளை கோமளமே 
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே 

பொருள்:
அத்தர் - சிவபெருமான் 
சிவபெருமானின் சித்தம் அனைத்தையும் தன்வயத்தில் வைத்திருக்கும், சந்தனக் குவியல் போன்ற முலைகளை கொண்டிருக்கும் அழகிய இளைய பெண்ணே, நான் செய்த தீவினையால், என் இறுதி காலத்தில், கொடிய எமன் என்னை துன்புறுத்தும் போது, எனக்கு அச்சம் உண்டாகும் போது, அன்னையான உன்னை அழைப்பேன். அப்போது, நீ "அஞ்சேல்" என்று ஓடிவந்து அருள் செய்வாய்.

பாடல் (ராகம் - சிவரஞ்சனி, தாளம் - ஆதி) கேட்க:


Check this out on Chirbit

Saturday 9 May 2015

பாடல் - 32

பலன் - துர்மரணம் வராமல் இருக்கும்

ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல் பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன், ஈசர் பாகத்து நேரிழையே.

பொருள்:
ஈசனின் ஒரு பாகத்தில் வீற்றிருக்கும் அன்னையே, நான் ஆசை என்னும் பெருங்கடலில் மாட்டிக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தேன். கருணையற்ற எமனின் பாசக்கயிற்றில் சிக்கி துன்பம் மிக கொண்டிருந்தேன். அப்போது,  நின் பாதமாகிய தாமரை மலரை என் தலைமேல் நீயாகவே (நான் கூப்பிடாமலேயே) வைத்து என்னை ஆண்டுகொண்டாய். அப்படிப்பட்ட நின் நேசத்தை நான் என்ன என்று சொல்வது?

பாடல் (ராகம்: ரஞ்சனி, தாளம்: ----விருத்தம்----) கேட்க:

Check this out on Chirbit

Monday 4 May 2015

பாடல் - 31

பலன்: மறுபிறவியில் இன்பம் அளிக்கும்

உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்கு
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

பொருள்:
அன்னை அபிராமி, அவள் மறுபாகமான சிவ பெருமான், இருவரும் ஒரே உருவில், அர்த்தநாரீஸ்வர ரூபம் கொண்டு என் முன் வந்து, என்னை தங்களுக்கு தொண்டு செய்ய வைத்தார்கள். இதுவே பெரும் பாக்கியம். இதற்கு மேல் எனக்கு எண்ண வேறொன்றுமில்லை. நான் வணங்கும் தெய்வம் அன்னை அபிராமி. என் சமையம் சாக்தம் (சக்தி வழிபாடு, அம்பாள் உபாசனை).
எனக்கு வேறு தாயும் இல்லை அன்னை உன்னை தவிர. இவ்வாறு எண்ணுவதால் மூங்கில் நிற தோளுடைய மற்ற பெண்கள் மேலும் எனக்கு ஆசை இல்லாமல் போய்விட்டது.

அன்னையை தொழுதால் முக்தி கிடைக்கும். மறுபிறவி கிடையாது. எனினும் பலனில் மறுபிறவியில் இன்பம் அளிக்கும் என்று உள்ளது. இதற்கு காரணம், மறுபிறவியே கிடையாது என்பதே பேரின்பம் இன்பம் தான்.

பாடல் (ராகம்: ஹமீர்கல்யாணி, தாளம்: --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

பாடல் - 30

பலன்: தொடரும் துன்பம் நீங்கும்

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே, உனக்கு? இனி நான் என் செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும், கரை ஏற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே, பல உருவே, அருவே என் உமையவளே.

பொருள்:
அன்னையே, என்னை அன்றொரு நாளே, நான் பாவங்கள் செய்வதற்கு முன்பே, தடுத்து ஆட்கொண்டாய். அவ்வாறு செய்யவில்லை என்றால் அது உனக்கு நல்லதாகாது. ஏனென்றால், கருணையே உருவான உமையவள் நீ. இனி நான் என்ன செய்தாலும் சரி, பாவங்கள் செய்து நடுக்கடலில் வீழ்ந்தாலும், என்னை கரை எற்ற வேண்டியது உன் திருவுள்ளத்தின் பொறுப்பு. ஒரு உருவமாகவும், பல உருவமாகவும், உருவமே இல்லாமலும் காட்சி அளிக்கும் அன்னையே என்னை காத்தருள்வாயாக.

பாடல் (ராகம்: சுத்த பங்களா, தாளம்: மிஸ்ர சாபு) கேட்க:

Check this out on Chirbit

Saturday 2 May 2015

பாடல் - 29

பலன்: எல்லா சித்திகளும் பெறலாம்

சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகி, திகழும் பரா
சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

பொருள்:
8 சித்திகள் - அஷ்ட மஹா சித்திகள்:
1. அணிமா - அணு போன்ற சிறிய உருவம் கொள்ளுதல்
2. மஹிமா - பெரிய உருவம் கொள்ளுதல்
3. கரிமா - மிக கணமான சரீரம் கொள்ளுதல்
4. லஹிமா - மிக மெல்லிய சரீரம் கொள்ளுதல்
5. ப்ராப்தி - எல்லா இடத்திற்கும் தடையின்றி சஞ்சரித்தல்
6 . ப்ராகாம்யம் - நினைத்தவற்றை பெறுதல்
7. ஈசத்வம் - அனைத்திற்கும் தலைவனாக இருத்தல்.
8. வசித்வம் - அனைத்தையும் தன்வயப்படுத்துதல்

இந்த 8 சித்திகளாகவும், இதனை அருளும் தெய்வமாகவும், பராசக்தியாகவும், அந்த சக்தியால் தழைத்திருக்கும் சிவமாகவும், தவம் செய்வோர் பெரும் முக்தியாகவும், முக்திக்கு விதையான ஞானமாகவும், இந்த ஞானத்திலிருந்து முளைத்த புத்தியாகவும், இந்த புத்தியால் ஏற்பட்ட பற்றற்ற மனநிலையாகவும் இப்படி அனைத்தாகவும் ஆனவள் அன்னை அபிரமியன்றி வேறெவரும் இல்லை.

அம்பாள் வித்யா ஸ்வரூபிணி ஆவாள். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் "வித்யா அவித்யா ஸ்வரூபிணி" என்று ஒரு நாமம் இதனை குறிக்கும். மேலும் சின்மயீ (சித் வடிவினள்) என்ற நாமமும் அம்பாளின் ஞான ஸ்வரூபத்தை குறிக்கும்.

ஸ்ரீ சக்ரத்தில், வெளி பிரகாரம் - த்ரைலோக்ய மோகன சக்ரம் அல்லது பூபுரம். இதில் மூன்று இணை சுற்றுகள் (concentric) உண்டு. அவற்றில், முதல் சுற்றில் அணிமாதி அஷ்டசித்திகள் உள்ளனர். இரண்டாம் சுற்றில் மாத்ருகா சக்திகள் (சப்த கன்னிகையர் போன்றோர்) உள்ளனர். மூன்றாம் சுற்றில் 10 முத்ரா சக்திகள் (சம்க்ஷோபினி போன்ற சக்தி தேவதைகள்)உள்ளனர்.

பாடல்(ராகம்-கமலா மனோஹரி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:

Check this out on Chirbit