Wednesday 11 March 2015

பாடல் - 17

பலன்: கன்னிகைகள் நல்வரன் அமையப்பெறுவர்

அதிசயமான வடிவுடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சயானன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயமாக, முன் பார்த்தவர் தம்
மதி சயமானதன்றோ, வாமபாகத்தை வவ்வியதே

பொருள்:
அபிராமி அனைவரும் அதிசயம் அடையும்படியான அழகு வாய்ந்தவள். அரவிந்தம் - தாமரை - முதலிய மலர்கள் எல்லாம் துதிக்கத்தக்க, வெற்றி நிறைந்த முகம் உடையவள். (சயானன - ஜயம் (வெற்றி) முகம். ஹயக்ரீவருக்கு குதிரை முகம். ஹய - குதிரை. ஹயானனன், அச்வானனன் என்றும் அவரை அழைப்பதுண்டு. அஸ்வம் - குதிரை. அதுபோல் சயானன என்றால் வெற்றி முகம்)

"கமலாகோடி சேவிதா" என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம், அம்பாளை கோடி தாமரை மலர்கள் வணங்குகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இங்கு தாமரை - லக்ஷ்மி தேவி அல்லது அழகிய வஸ்துக்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். அம்பாளை அழகிய வஸ்துக்கள் வணங்குகின்றனவா? அல்லது அம்பாளை வணங்குவதால் அவை அழகாக இருக்கின்றனவா? முடிவு நம்மிடத்தில். எதுவாக இருந்தாலும் அம்பாளை வணங்குவதால் நமக்கு நன்மையே என்று உறுதி கொள்ளவேண்டும்.

இரதி பதி - மன்மதன். இவனது அம்பிற்கு அடிபணியாதவர் ஒருவரும் இல்லை. அப்படிப்பட்ட காமனின் வெற்றியை )சயம் - ஜயம்) தோல்வியாக (அபசயம் - அபஜயம்) மாற்றியவர் சிவபெருமான். அவர் தன் நெற்றிக்கண்ணை திறந்து காமனை எரித்தார். அதோடு அவன் வெற்றிச்செருக்கும் அழிந்தது. அப்படிப்பட்ட சிவபெருமானின் மனதினையும் நீ (அபிராமி) வெற்றிக்கொண்டாய். அதோடு சிவனின் இடபாகத்தையும் நீ உணதாக்கிகொண்டாய்.

பாடல் (ராகம் - அஸாவேரி , தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment