Monday 2 March 2015

பாடல் - 13

பலன்: வைராக்கியம் தரும்

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே,  கறை கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உனை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

பொருள்:
ஈரேழு = பதினான்கு உலகங்களை படைத்தவளே (14 உலகம் - பூலோகம் (பூமி), பூமிக்கு மேல் 6 லோகங்கள் - புவர் லோகம், சுவர் லோகம் (சுவர்க்கம்), மஹர் லோகம், ஜன லோகம், தப லோகம், சத்ய லோகம் (பிரம்மா இருப்பிடம்) மற்றும் பூமிக்கு கீழ் உள்ள 7 லோகங்கள் - அதள , விதள, சுதள, தளாதள, ரசாதள, மகாதள, பாதாள (ஆதி சேஷன் இங்கு இருந்துக்கொண்டு அண்டத்தை தன தலையில் தாங்குகிறார்.) லோகங்கள்.),
படைத்த வண்ணம் அவற்றை காப்பவளே, பிரளயத்தின் போது அனைத்துலகினையும் தன்னுள் ஈர்த்துக்கொள்பவளே (இதுவே அழித்தல் எனப்படும்),
கறை கண்டன் - விஷம் அருந்தியதால் நீல நிற கறை உடைய கழுத்து கொண்ட சிவா பெருமான் - கண்டம் - கழுத்து
சிவ பெருமானுக்கு மூத்தவளே - ஆதி சக்தியிடமிருந்து மும்மூர்த்திகள் தோன்றினர்.
விஷ்ணு என்றும் இளமை வடிவானவர். அவருக்கு அம்பாள் தங்கை.
மாத்தவளே - மலையத்வஜன், மதங்க முனி, காத்யாயன மஹரிஷி முதலியோர் பெருந்தவம் செய்து அம்பாளை தங்கள் மகளாய் பெற்றெடுத்தனர்.
உன்னை விட வேறு தெய்வத்தை நான் வணங்குவேனோ? என்று பட்டர் பாடுகிறார்.

இந்த மூன்று தொழில்களை ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - ஸ்ருஷ்டிகர்த்ரீ பிரம்ம ரூபா, கோப்த்ரீ கோவிந்த ரூபிணி, சம்ஹாரினீ ருத்ரரூபா என்று வர்ணிக்கிறது.

அதாவது படைக்கும் பொருட்டு பிரம்மாவாகவும், காக்கும் பொருட்டு விஷ்ணுவாகவும், அழிக்கும் பொருட்டு ருத்ரனாகவும் அம்பாள் வடிவெடுக்கிறாள்.

பாடல் (ராகம் - நாட்டகுறிஞ்சி, தாளம் - கண்ட சாபு) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment